"தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" – தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்த “கவியரங்கம்”

"தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" – தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்த “கவியரங்கம்”


உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் “தூயபொருநை நெல்லைக்குப் பெருமை” என்ற பெயரில் மாணவ மாணவிகளின் கவியரங்கம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கை எழில்சூழ நடைபெற்றது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் “தூய பொருநை நெல்லைக்குப் பெருமை” என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்து கவியரங்கம் நடைபெற்றது. உலக தண்ணீர் தினம் என்பதை காட்சிப்படுத்த ஆற்றங்கரையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

image

கல்லிடைக்குறிச்சியையும், அம்பாசமுத்திரத்தையும் இணைக்கும் ஆற்றுப்பாலம். கீழே தாமிரபரணி ஆறு! ஆற்றுக்குள் இரு பக்கமும் பழங்கால கல் மண்டபங்கள் ! பார்க்கும் இடமெல்லாம் பச்சை நாணல் புல் செழித்து வளர்ந்து நிற்க, பாறைகளுக்கு ஊடே ஆர்ப்பரித்து பாயும் தாமிரபரணி ஆறு. குடும்பங்களாக வந்து குளிப்போர் சத்தம் ஒரு பக்கம், தண்ணீருக்குள் தலைகாட்டும் மொட்டை பாறைகளின் மேல் துணி துவைபடும் சத்தம் ஒரு பக்கம், இந்த சத்தத்தினூடே மணல் பரப்பில் விரித்திருந்த பச்சைப்புல் மேடையில் இயற்கை சூழ நடந்தது உலக தண்ணீர் தினத்திற்கான “சிறப்புக் கவியரங்கம்”. 

image

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடிநீராக உற்பத்தியாகி வரும் தாமிரபரணிஆறு, எங்கே கலப்படம் அடைகிறது ? கழிவு நீர் எங்கே கலக்கிறது என்பது குறித்தெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும் ! நெகிழிகளை, கழிவுகளை, நேரடியாக ஆற்றில் சேர்ப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ‘தூயபொருநை நெல்லைக்குப் பெருமை’ என்பதனை வருங்காலத்தில் மக்கள் இயக்கமாக மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைத்து தாமிரபணி நதியை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும்” என பேசினார்.

image

நிகழ்ச்சியை கௌரவிக்க வந்தவர்களும் இயற்கையோடு இணைந்த சூழலில் மனதை பறிகொடுத்து இறுதியில் கவி பேசி முடித்தார்கள். இதனைத் தொடர்ந்து மாணவிகள் உலக தண்ணீர் தினம் குறித்தும், தாமிரபரணி நதி குறித்தும் நதி நீரை பாதுகாக்க வேண்டிய முறைகள் குறித்தும் கவிதைகளாக எழுதி வந்திருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் தங்கள் கவிதைப் படைப்புகளை படித்துக் காண்பித்தார்கள். பின்னர் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19